Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10154
Title: மீன்பிடி சமூகத்தில் பெண்களின் வகிபங்கு : நாகர்கோவில் J/423 கிராமப் பிரிவினை மையமாகக் கொண்ட ஒரு விடயக்கலை ஆய்வு
Authors: Kirushanthini, L.
Srikanthan, S.
Keywords: பெண்கள்;பன்முக வகிபங்கு;மீனவசமூகம்;பண்புசார் அணுகுமுறை
Issue Date: 2021
Publisher: University of Jaffna
Abstract: உற்பத்தி மற்றும் வர்த்தக உறவுகளில் பெண்களின் வகிபங்கு முதன்மையானது. மனித பண்பாட்டு வரலாற்றில் பெண்களின் பொருளாதார பங்கேற்பு பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வந்துள்ளது. எனினும் இன்றைய உலகில் பெண்கள் முதன்மையான பொருளதார பங்காளிகளாக உள்ளனர். இந்நிலையில் இவ்வாய்வானது மரபார்ந்த மீன்பிடித் தொழிலில் பெண்களின் வகிபங்கு தொடர்பாக ஆராய்கின்றது. யாழ்ப்பாண மாவட்டம் மிகவும் கடல்வளம் கொண்ட பகுதியை உள்ளடக்கிய ஒன்று. இங்கு கடற்கரையோரத்தினை அண்மித்து வாழ்கின்ற மக்களின் பிரதான வாழ்வாதார தொழில்முறையாக மீன்பிடி காணப்படுகின்றது. ஆண் மையமிட்ட பிரதான தொழில்முறையாக மீன்பிடித் தொழில் காணப்பட்டாலும் குடும்பப் பெண்களின் மீன்பிடித் தொழில்சார் வகிபங்கு என்பது பன்முகத் தன்மை வாய்ந்தது. இந்நிலையில் மீன்பிடிச் சமூகத்தில் பெண்களின் பன்முக வகிபங்கினை இனங்காணுதலும் அதுசார்ந்து அவர்கள் எதிர்நோக்கும் விடயங்களைப் பகுப்பாய்வு செய்தலும் இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். மருதங்கேணிப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கரையோரக் கிராமங்களில் ஒன்றான நாகர்கோவில் கிராமத்தினை அடிப்படையாக் கொண்டு பண்புசார் அணுகுமுறையின் வழியாக இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வுக்கான முதல்நிலைத் தரவுகள் ஆய்வுப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வின் வழியாகச் சேகரிக்கப்பட்டன. நாகர்கோவில் பிரதேசத்தில் பெண்களின் பன்முக வகிபங்கினை இனங்காணும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட பங்குபற்றும் அவதானமும் வகைமாதிரியாக தெரிவு செய்யப்பட்ட வர்களிடம் சேகரிக்கப்பட்ட விடயக்கலை ஆய்வும் இவ்வாய்விற்கான பிரதான தகவல் மூலங்களா கும். மேலும் ஆய்வுப் பிரதேசத்தின் பிரதான தகவலாளியுடனான நேர்காணல்கள் பெண்களின் பன்முக வகிபங்கு தொடர்பான பகுப்பாய்வினை முறைப்படுத்த பயன்படுத்தப்பட்டன. சேகரிக்கப்பட்ட பண்புசார் தரவுகள் அனைத்தும் கருப்பொருட் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு பொருத்தமான கருப்பொருட்களில் விவாதிக்கப்பட்டன. மீன்பிடிச் சமூகத்தில் பெண்களின் வகிபங்கானது தொழில்சார்ந்தது மற்றும் குடும்பத்தோடிணைந்த சமூகம்சார்ந்தது என இருபெரும் நிலைகளில் காணப்படுகின்றது. இங்கு பெண்களின் தொழில்சார் வகிபங்கு பன்மைத்துவமானது. கடல் உணவு பதப்படுத்துதல், வலைகளிலிருந்து மீன்களைக் கழட்டுதல், மீன்களை வகைகளாகத் தெரிதல். மீன்களை வெட்டிக் கொடுத்தல், மீன்களை உலர வைத்தல். கடலில் மீன்பிடிக்கும் வலையினை சிலக்குத் தட்டுதல், கரைவலை இழுத்தல், மீன்களை ஏலம் விடுதல், கடல் உணவுகளை விற்பனை செய்தல், கருவாடு விற்பனை செய்தல், மீன்களை ஐஸ் அடித்தல் போன்ற முதன்மையான செயற்பாடுகளில் பெண்களின் வகிபங்கு என்பது குறிப்பிடத்தக்கது. தொழில்சார் வகிபங்கிற்கு புறம்பாக மீனவப் பெண்களின் குடும்பக் கட்டமைப்புசார் வகிபங்கு என்பதும் பன்முகத் தன்மை வாய்ந்தது. குடும்பப் பராமரிப்பு, சமூக உறவுபேணல், சமய-சமூக பண்பாட்டம்சங்களில் பங்கேற்றல் என விரிந்து காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பன்முகத் தன்மையுடை வகிபங்கினைக் கொண்டுள்ள ஆய்வுப் பிதேசப் மீனவப் பெண்கள் சமகாலத்தில் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றமையும் இவ்வாய்வின் வழியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பால்நிலை சமத்துவமற்ற நிலையில் காணப்படுவதுடன் இரட்டைச் சுமையுடையவர்களாக இருப்பது பெண்களின் சமூக மேம்பாட்டிற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளமை கவனிக்கத்தக்கது. மீனவ சமூகத்தில் வாழும் பெண்களின் பன்முகத்துவமான வகிபங்கு அவர்களுடைய உடல்-உள-சமூக ஆரோக்கியத்தினை பாதுகாக்கும் வகையில் ஒழுங்குபடுத்தல் என்பது இவ்வாய்வின் வழியாக முன்வைக்கப்படும் முதன்மையான பரிந்துரையாகக் காணப்படுகின்றது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10154
Appears in Collections:Sociology



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.