Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10819
Title: இயற்கையின் மேலாதிக்கம்- ஓவியர் ஆசை இராசையாவின் நிலக்காட்சி ஓவியங்களை அடிப்படையாகக்கொண்ட ஆய்வு
Authors: Balamurugan, V.
Keywords: நிலக்காட்சி ஓவியம்;கையாளுகை;யாழ்ப்பாணம்;லயம்;இழைமம்
Issue Date: 2024
Publisher: University of Jaffna
Abstract: மனிதனுக்கும் இயற்கைக்குமான உறவு மிக இறுக்கமானது. பண்டைய காலத்திலிருந்தே கலைஞர்கள் நிலவுருவை வரைந்து வருகின்றனர். கிரேக்கர்களும் ரோமானியர்களும் இயற்கை மற்றும் நந்தவனக்காட்சிகளின் சுவர் ஓவியங்களை உருவாக்கினர். இயற்கை பற்றிய அவதானமும் புரிந்துணர்வும் ஓவிய வெளிகளில் நிலக்காட்சிகளாகின்றன. நிலக்காட்சி ஓவியங்கள் பரந்த எல்லைகளைக்கொண்டதாக இயற்கைக் காட்சிகளை முதன்மைப்படுத்தி வரையப்படும் ஓவியங்களாகும். இயற்கை காட்சிகளை வெறும் காட்சிப்பதிவுகளாக அல்லாது அவற்றை ஓவிய நிலைக்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஓவியர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கேயான அணுகுமுறைகளைக் கையாள்வதும் கருத்து நிலைகளை உட்புகுத்துவதும் வழக்கமானதாகும். நிலவுரு வரைதலில் விடயத்தெரிவு, வர்ணத்தெரிவு மற்றும் உத்தி முறைகள் போன்றவற்றில் பரீட்சார்த்த முயற்சிகள்தொடர் இயக்கமாக கலை வரலாற்றில் காணப்பட்டு வருகிறது. யாழ்ப்பாணத்து ஓவியக்கலை வரலாற்றில் காத்திரமான கலைஞரான ஓவியர் ஆசை இராசையா இலங்கையின் தலைநகரில் சித்திர ஆசிரியராக சில வருடங்கள் கடமையாற்றி, அத் தொழிலை இனக்கலவரம் காரணமாக உதறித்தள்ளிவிட்டுத் தனது பிரதேசமான வடபகுதிக்கே திரும்பி வந்து தன்னை ஓர் முழுநேர ஓவியக்கலைஞனாக தக்கவைத்துக்கொண்டவர். தன் பிரதேசத்தின் மீதுள்ள பற்றும் ஓவியத்துறையில் உள்ள ஈடுபாடும் இவரைச் சமகால ஓவியர்களிடையே தனித்துவம் கொண்டவராக காட்டியது. இவரது ஆக்கங்கள் பிரதிமை ஓவியங்கள், நிலக்காட்சி ஓவியங்கள், கருத்து வெளிப்பாட்டு ஓவியங்கள், முத்திரை வடிவமைப்புக்கள் எனப் பரந்தவை. இவரது ஓவியங்கள் யாழ்ப்பாணத்தின் மண்வாசனை கொண்டவையாகவும் யாழ்ப்பாண மக்களின் வாழ்வியலைக் கூறுவனவாகவும் வரலாற்றுப் பதிவுகளாகவும் விளங்குகின்றன. இவரது நிலக்காட்சி ஓவியங்களும் ஊடகக்கையாளுகையும் ஓவியத்துறையில் தனித்துவமான அடையாளங்களாகப் பார்க்கப்படுகின்றது. மக்களது வாழ்வியல் மற்றும் பிரதேசத்தின் தனித்துவமான அடையாளங்கள் என்பவற்றை யதார்த்தமாக காட்டுவனவாக இவரது நிலக்காட்சி ஓவியங்கள் அமைந்திருப்பதோடு இயற்கையின் தரிசனமானது மனித சக்தியை விஞ்சிய மாபெரும் சக்தியாக காணப்படுகிறது என்பதனை பௌதீக தோற்றத்தின் விஸ்தீரணத்தை அழகியல் அம்சத்துடன் வெளிப்படுத்துபவனவாகவும் அமைந்துள்ளன. இவ் ஆய்வுக்குரிய விடயப் பொருளாக அவரின் நிலக்காட்சி ஓவியங்கள் அமைகின்றன. இவ் ஆய்வின் தேடலாக இவரது நிலவுருக்களில் இயற்கையின் பிரசன்னம் எவ்வாறு அமைந்துள்ளது? பௌதீகத்தோற்றத்தினை, அதன் பண்பினை, பிரமாண்டத்தினை, அதன் அழகினை மற்றும் இயற்கையின் அதீத சக்தியினை வரையறுக்கப்பட்ட ஓவியச் சட்டகத்திற்குள் எவ்வாறு தோற்றுவிக்கிறார்? விடயத்தெரிவு மற்றும் பகுதிகளின் பிரிப்பிலும் பிரத்தியோகமான தன்மையை எவ்வாறு கொண்டிருந்தார்? என்ன வகையான வர்ணமிடும் நுட்பத்தைக் கொண்டிருந்தார்? இவரது நிலவுருக்கள் எவ்வகையான வரலாற்றுப் பதிவுகளாய் அமைகின்றன? தனது உள்மனம் தொடர்பான ஆத்மீக வெளியினை எவ்வாறு கட்டமைக்கின்றார்? ஓவிய மூலக்கூறுகளை எவ்வாறு கையாளுகின்றார்? அதன் மூலம் எவ்வாறு அர்த்தமுள்ள கலைப்படைப்பை உருவாக்குகின்றார்? என்பவை அமைகின்றன. பண்புசார் ஆய்வாக அமையும் இவ் ஆய்வு விவரண ஆய்வு முறை மற்றும் பண்பாட்டு மானிடவியல் ஆய்வு முறைகளை உள்ளடக்கியது. முதலாம் நிலைத்தரவுகளாக ஓவியரின் நிலக்காட்சி ஓவியங்களும் மற்றும் இரண்டாம் நிலைத்தரவுகளாக நூல்கள், சஞ்சிகைகள், நேர்காணல்கள் மற்றும் இணையத்தளத் தகவல்கள் என்பனவும் அமைந்துள்ளன. பெருவெளியை ஊடறுத்து நிற்பதாக பிரதான உருக்களை அமைப்பதன் மூலமும் மனித உருக்களை அளவில் சிறியனவாகக் கட்டமைக்கின்ற முறையினாலும் இயற்கைத்தோற்றத்தின் சக்தியை வெளிப்படுத்துவதோடு வர்ணத்தெரிவு, ஊடகக் கையாளுகை மற்றும் வேற்றியல்பு கொண்ட இழைமங்களை பொருத்தமான முறையில் இணைத்தல் என்பவற்றால் அழகினை வெளிப்படுத்தி, தான் காணுகின்ற அக உலகின் தோற்றத்தை இப் புற உலகின் காட்சிகளாகக் காண்பிய நிலைப்படுத்தல் என்பவை இவ் ஆய்வின் பேறுகளாக அமைகின்றன. இவ் ஆய்வின் பயனாக நிலக்காட்சி ஓவியத்தை அமைக்கின்றபொழுது எத்தகைய காட்சி மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்பதையும் அறிந்துகொள்வதாக அமைவதோடு ஒரு நிலக்காட்சி ஓவியத்தை எவ்வாறுவாசிக்க வேண்டும், இரசிக்க வேண்டும் எனும் ஞானத்தை வழங்குவதாகவும் அமைகிறது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10819
Appears in Collections:2024



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.