Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11939
Title: ஈழத்துக் கூத்து மரபில் கத்தோலிக்கக் கூத்துக்கள்
Authors: Robert Arudsegaran, T.
Keywords: கூத்து;தென்மோடி;வடமோடி;இசை;நவீன அரங்கு
Issue Date: 2024
Publisher: University of jaffna
Abstract: ஈழத் தமிழர்களின் தொன்மையான கலைகளுள் கூத்துக் கலையானது முதன்மையானதொன்றாக விளங்குகின்றது. தற்போது புகழ் பெற்றிருக்கும் செந்நெறி இசை, பரத நாட்டியம், நவீன நாடகம் போன்ற கலைகள் ஈழத்தில் புகழ் பெறுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கும் முன்னரே முழு வளர்ச்சி பெற்றுக் கூத்துக் கலையானது புகழ் பெற்றுள்ளது. இக்கலையானது ஈழத்தின் பல இடங்களில் வளர்ச்சி பெற்றுப் பிரதேசத் தனித்துவம் வாய்ந்த அரங்கப் பண்புகளோடு மக்கள் வழிபாட்டுக் கலையாகவும் சடங்குகளின் ஒரு கூறாகவும் நிலை பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் வடமோடி, தென்மோடி என்றும் முல்லைத்தீவில் முல்லை மோடி என்றும் மன்னாரில் வடபாங்கு, தென்பாங்கு என்றும் பல விதமன அளிக்கை முறைகளில் கூத்துகள் ஆடப்பட்டு வந்துள்ளன. மலையகத்தில் காமன் கூத்து, பொன்னர் சங்கர், அர்ச்சுனன் தபசு போன்ற கூத்து வகைகள் காணப்படுகின்றன. யாழ்ப்பாண, மட்டக்களப்புத் தென்மோடி, வடமோடிக் கூத்துக்கள் அளிக்கை முறையில் வெவ்வேறானவை ஆகும். போர்த்துக்கீசர் வரவிற்குப் பின்னர் கத்தோலிக்க சமயம் ஈழத்தில் பரவியதோடு கத்தோலிக்க மக்களின் கலையாகக் கூத்துக்களும் வளர்ச்சி பெற்றன. சிறந்த புலவர்களால் எழுதப்பட்ட இலக்கியத் தரம் வாய்ந்த கத்தோலிக்கக் கூத்துக்கள் யாழ்ப்பாண மாவட்டத்திலும் ஏனைய பல மாவட்டங்களிலும் நிகழ்த்தப்பட்டன. கத்தோலிக்க தென்மோடிக் கூத்துகள் யாழ்ப்பாணக் கூத்து மரபில் ஓர் தனியிடத்தைப் பெற்றுக் கொள்ளும் அளவிற்குப் பெரு வளர்ச்சியடைந்து விட்டன. கத்தோலிக்கத் திருச்சபையால் தென்மோடிக் கூத்துக்கள் சமய வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு நீண்ட காலமாக நேர்த்தியாக வளர்க்கப்பட்டன. யாழ்ப்பாணத்தில் தவத்திரு ஆறுமுக நாவலர் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட சைவமும் தமிழும் எனும் தூய்மைவாதச் செயற்பாடுகள் சைவ சமய மக்களிடம் இருந்த சிறு தெய்வ வழிபாடுகளையும் கூத்துகளையும் அழித்து விட்டன என்பதைப் பல ஆய்வாளர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். ஈழத்தின் பிரதேசத் தனித்துவம் மிக்க கூத்துகளுள் தற்காலத்தில் யாழ்ப்பாணத்தின் முதன்மையான கூத்து அடையாளமாக இருப்பது கத்தோலிக்கத் தென்மோடிக் கூத்து என்பது குறிப்பிடத்தக்கதாகும். எனினும் கடந்த கால் நூற்றாண்டு காலமாகச் சில பின்னடைவுகளைக் கத்தோலிக்க கூத்துக் கலையானது சந்தித்து வருகின்றது. ஈழத்துக் கூத்து மரபில் யாழ்ப்பாணத் தென்மோடிக் கூத்து பெற்றிருக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதையும் யாழ்ப்பாணத்தில் சைவ சமயத் தென்மோடி, வடமோடிக் கூத்துகள் அருகிப் போனமைக்கான காரணங்களை அறிவதையும் முதன்மையான நோக்கங்களாகக் கொண்டு இவற்றுக்கான தீர்வுகளைக் கண்டறிய இந்த ஆய்வு முயற்சிக்கின்றது. கள ஆய்வின் ஊடாகப் பெறும் தரவுகள், முன்னைய ஆய்வுகள் போன்றவற்றின் துணையுடன் விவரண, விமர்சன ஆய்வு முறைகள் இந்த ஆய்வில் பயன்படுத்தப்படுகின்றன. ஈழத்தின் பல்வகைக் கூத்து மரபில் தனியிடத்தைப் பெற்றிருக்கும் யாழ்ப்பாணத் தென்மோடிக் கூத்தானது கத்தோலிக்கத் திருச்சபையால் வளர்க்கப்பட்டுத் தற்காலத்தில் அதே திருச்சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் யாழ்ப்பாணத் திருமறைக் கலாமன்றத்தால் நவீன அரங்காக மாற்றப்பட்டுக் கலவைப் பண்பு கொண்டதாகப் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது என்பது இந்த ஆய்வின் முடிவாகக் கொள்ளப்படுகின்றது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11939
Appears in Collections:2024



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.