Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11942
Title: குலமுதுவர்களின் துன்பம் நிறைந்த வாழ்வும் அவர்களின் நீதி நெறி வழுவாமையும்: ஒரு கிறிஸ்தவப் பார்வை
Authors: Stella Nancy, S.A.
Keywords: குலமுதுவர்கள்;நீதிமான்கள்;துன்பம்;மனித வாழ்வு;இயேசு கிறிஸ்து
Issue Date: 2024
Publisher: University of jaffna
Abstract: சமகால உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் துன்பம் என்பது தவிர்க்கப்பட முடியாத ஒரு சவாலாகவே காணப்படுகின்றது. துன்பங்கள் பற்றிய புரிதல் சமயங்களுக்கு சமயம் வேறுபட்டதாக காணப்படுகின்றது. எனினும் கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரையில் துன்பம் என்பது மறைபொருள் தன்மையுடையதாகவே கருதப்படுகின்றது. நல்லவர்களின் துன்பம் மனிதப் புரிதலுக்கு அப்பாற்பட்டது என்ற வகையில் மனிதர்கள் துன்பம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது எனக் கருதி, அதிலிருந்து விடுபட முடியாத தன்மையை உணருகின்றனர். மனித வாழ்க்கை வெறும் நியதிகளுக்கும் விதிகளுக்கும் கட்டுப்பட்டதல்ல; மாறாக கடவுளுக்கு மட்டுமே கட்டுப்பட்டது என்பதை வெளிப்படுத்தி, சவால்மிக்க உலகில், நீதிமான்களாக விளங்கிய குலமுதுவர்களின் துன்பம் நிறை வாழ்வையும், அவர்களின் நீதி நெறி வழுவாமையையும் கிறிஸ்தவ இறையியல் பின்னணியில் புரிந்து கொள்ள முற்படுவதே இவ் ஆய்வின் நோக்கமாகும். குலமுதுவர்களின் துன்பியல் வாழ்வை முன்மாதிரியாகக் கொண்டு, இறைவனின் பார்வையில் நல்லவர்களாகக் காணப்படும் நீதிமான்கள் துன்புறுவது ஏன்? அவர்களின் துன்பங்களை எவ்விதம் புரிந்து கொள்ளலாம்? முதலியவை ஆய்வுப் பிரச்சினைகளாக அமைந்துள்ளன. மனித வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகிய துன்பம் நீதிநெறி தவறாதவர்களுக்கும் பொதுவானது என்பதும் நீதிமான்களான குலமுதுவர்களின் வாழ்வும் அவர்கள் எதிர்கொண்ட ஒவ்வொரு துன்பமும் அவர்களையும் எதிர்கால சந்ததியையும் இறை உறவில் ஆழப்படுத்தும் படிப்பினைகளாக அமைகின்றன என்பதும் ஆய்வின் கருதுகோள்களாக அமைகின்றன. குலமுதுவர்கள் பற்றிய அறிமுகம் மற்றும் துன்பங்கள் பற்றிய பொதுமைப் பார்வையுடன் திருவிவிலியத்தின் முதல் மற்றும் நிறைவு ஏற்பாட்டு நூல்களின் அடிப்படையில் வரலாற்றில் வாழ்ந்த பல்வேறுபட்ட நீதிமான்களின் வாழ்வியலும் அவர்தம் துன்பியல் அனுபவங்களும் போன்ற விடயங்களை ஆய்வுக்குரிய இலக்கியங்களிலிருந்து பெறுதவற்கு உய்த்துணர் முறை ((Deductive Method) கையாளப்பட்டுள்ளது. ஆய்வுக்குரிய தரவுகள் திருவிவிலியம், சுற்றுமடல்கள், சஞ்சிகைகள் மற்றும் கட்டுரைகள் ஆகியவற்றினூடாக திரட்டப்பட்டுள்ளன. திருவிவிலியத்தில் முதல் ஏற்பாட்டில் காணப்படும் நீதிமான்களான குலமுதுவர்களின் வாழ்வியல் நாடோடித் தன்மையுடையதாக காணப்பட்டதால் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான துன்பங்களை அவர்கள் அதிகமாக அனுபவித்தனர். நிறைவு ஏற்பாட்டில் நீதிமானாக விளங்கிய இயேசு கிறிஸ்துவும் மனிதராகப் பிறந்து பல்வேறு துன்பங்களைக் கடந்து இறை மாட்சியுடன் விண்ணகத்தில் வீற்றிருக்கிறார். அவரது அடிச்சுவட்டைப் பின்பற்றும் ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் துன்பம் என்பது இன்றியமையாதது போன்ற விடயங்கள் ஆய்வின் மூலம் வெளிக்கொணரப்பட்டுள்ளன. மனித குலம் முழுமையான விடுதலையை, மீட்பைப் பெறுவதற்காக இயேசு கொடிய பாடுகளை ஏற்றுக் கொண்டார். மனிதர்களும் தம் வாழ்வில் வெற்றியை அடைவதற்கு பல்வேறு துன்பங்களினூடாக செல்ல வேண்டும் என்பதே இறைவனின் திருவுளம் என்ற துன்பத்தின் மறைபொருள் தன்மையை புரிந்து கொள்வதற்கான முயற்சியாக இவ்வாய்வு அமைந்துள்ளது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11942
Appears in Collections:2024



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.