Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4133
Title: யாழ்ப்பாணத்தில் திரைப்பட இரசனை இயக்கம்
Authors: திவாகர், தி.
ரகுராம, சி.
Keywords: திரைப்பட இரசனை;திரைப்பட வட்டங்கள்;வெகுஜன வெள
Issue Date: 2018
Publisher: University of Jaffna
Abstract: யாழ்ப்பாணத்தில் திரைப்பட இரசனை அல்லது திரைப்பட நுகர்வு என்பது பல்வேறு தளங்களில் பல்வேறு வகைகளில் வளர்ந்து வந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் திரைப்பட இரசனையின் பல்பரிமாணங்கள், அதில் ஏற்பட்ட மாற்றங்கள் என்பன சிக்கலான விடயங்களாகக் காணப்படுகின்றன. இவற்றை இனங்காண்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. திரைப்பட இரசனை என்பது நீண்ட கால நோக்கில் ஆராயப்பட வேண்டிய ஒன்றாக அமைவதால் பல்வேறு கருத்துநிலைகளில் இருந்து யாழ்ப்பாணத்தில் திரைப்பட இரசனை என்ற ஆய்வுக்களம் அணுகப்பட்டுள்ளது. திரைப்பட இரசனையென்பது பல்வேறு படிநிலைகளிலும் அமைந்து காணப்படுகின்றது. யாழ்ப்பாணச் சூழலில் திரைப்படங்கள் அறிமுகமாகிய ஆரம்பகாலம் தொட்டு இன்றுவரை திரைப்பட இரசனையில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. யாழ்ப்பாணத் திரைப்படக் களத்தில் இரசிகர் மன்றங்கள், நற்பணி மன்றங்கள், திரைப்பட வட்டம், திரைப்பட இயக்கங்கள் என்பன பல்வேறு காலப்பகுதிகளில் தோன்றி மறைந்துள்ளன. இவையாவும் திரைப்பட இரசனையின்பால் கொண்டிருந்த செல்வாக்குகளை வெளிக்கொண்டு வருமுகமாக இவ் ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த இவ் ஆய்வின் துணை நோக்கமானது, யாழ்ப்பாணத்தில் எழுந்திருக்கக் கூடிய திரைப்பட இரசனை என்பது திரைப்பட இரசனை தொடர்பான மாற்றுவெளிகளை முன்வைத்திருக்கின்றதா என்பதையும் ஆராயத் தலைப்பட்டிருக்கிறது. ஆய்வு முறையியலானது அளவை ஆய்வு, மற்றும் பெறுதிசார் ஆய்வு எனஇருவகையில் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆய்விற்காக யாழ்ப்பாணப் பிராந்தியத்தில் வாழக்கூடிய திரைப்படத் திறனாய்வாளர்கள், திரைப்பட இரசனையாளர்கள், இரசிகர்மன்ற உறுப்பினர்களிடம் கலந்துரையாடல்கள், நேர்காணல்கள், குவிமையக் கலந்துரையாடல்கள் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட தரவுகள் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதன்வழி, யாழ்ப்பாணத் திரைப்பட இரசனை இயக்கங்கள் ஆரம்பம் முதலே வெகுஜன வெளியில் உருவாகவில்லை என்பதுடன் அந்த முயற்சிகள் அனைத்தும் கால ஓட்டத்தில் தோன்றியும் மறைந்தும் தற்காலிகத் தன்மையிலேயே மேலெழுந்தன என்பதும் ஆய்வின் வழியாகக் கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் திரைப்பட இரசனையானது தனியாள் இரசனை முதற் கொண்டு ஒரு இயக்கமாக வரையும் வளர்ந்து வந்திருப்பினும், அது போதியளவு மக்கள் மயப்படுத்தப்படவில்லை என்பதுடன் பரவலான பொதுசனத் தளத்திற்குள் அது இயங்கவில்லை என்பதனையும் இவ் ஆய்வானது இனங்காட்டுகின்றது. யாழ்ப்பாணத்தில் நிலவும் திரைப்பட இரசனை என்பது திரைப்படங்களைப் பார்த்தல், திரைப்படங்களை இரசித்தல், திரைப்படங்களை விமர்சித்தல், திறனாய்வு செய்தல் என்ற நிலைகளையும் கடந்து அரசியல், சமூகத் தளங்களிலும் விரிவாக்கம் பெற்றிருக்கின்றது. அரசியல் ரீதியில் திரைப்பட இரசனை இயக்கம் இரசிகர்களை பிரபல்ய மற்றும் மாற்று அரசியலுக்கும் இட்டுச் சென்றுள்ளது. இவற்றோடு சமூகத்தளங்களில் மக்களை நேசித்தல், மக்களுக்கு உதவுதல் முதலிய விடயங்களோடும் திரைப்பட இரசனைசார் செயற்பாடுகள் நீடிப்பைப் பெற்றுள்ளதென்பது இந்த ஆய்வின் மூலம் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது. திரைப்பட இரசனை திரைப்படங்கள் பற்றிய, திரைப்பட உருவாக்கம் பற்றிய ஆர்வநிலையை மக்கள் மத்தியில் பரவலாக தோற்றுவித்ததோடு திரைப்படங்களைத் தனியே பார்வையிடுகின்ற நிலையையும் கடந்து திரைப்பட உருவாக்கத்தை அறிந்து கொள்வது, திரைப்பட உருவாக்கத்தில் ஈடுபடுவதற்குத் துணையாக அமைவது முதலிய வௌ;வேறு கட்டங்களை நோக்கியும் பார்வையாளர்களை நகரச் செய்திருக்கின்றதென்பது தனியாள் இரசனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4133
ISBN: 978-955-0585-11-3
Appears in Collections:JUICE 2018



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.