Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4457
Title: | விவேகானந்தரின் ஆளுமை பற்றிய சிந்தனைகள்: ஒரு மெய்யியல் ஆய்வு |
Authors: | Nirosan, S. |
Keywords: | ஆளுமை;ஆன்ம பலம்;மனபலம்;உடல் பலம்;அறிவுசார் பலம் |
Issue Date: | 2016 |
Publisher: | South Eastern University of Sri Lanka |
Abstract: | இவ் ஆய்வுக் கட்டுரையானது சுவாமி விவேகானந்தரின் ஆளுமை பற்றியதும், ஆளுமை விருத்தி பற்றியதுமான சிந்தனைகளை பகுப்பாய்வு செய்வதோடு, அவை ஒரு சமூகத்தினதும், நாட்டினதும் அபிவிருத்திக்கு ஆற்றக்கூடிய பங்களிப்பினையும், சமகாலத்தில் அவற்றின் பொருத்தப்பாட்டினையும் விமர்சன ரீதியாக ஆராய்கின்றது. விவேகானந்தர் தன்னுடைய ஆளுமை பற்றிய சிந்தனைகளால், தன்னுடைய புரட்சிகரமான சிந்தனைகளால் இருளிலும், அறியாமையிலும், சிறுமையிலும், அடிமையிலும் அகப்பட்டு துன்பப்பட்டுக் கொண்டிருந்த பாரத தேசத்தை எழுச்சி பெறச்செய்தார். அவருடைய சிந்தனைகள் ஒரு தனிமனித ஆளுமை எவ்வாறு கட்டமைக்கப்பட வேண்டும் என்பதற்கான சிறந்த வரையறைகளை பாரத தேசத்திற்கு மட்டுமன்றி முழு உலகத்திற்குமாக பறைசாற்றி நின்றன. தனிமனிதனது ஆன்மீக ஆற்றலும், உள்ளத் துணிவும் எவ்வளவு பரந்ததும், ஆழமானதும் என்பதனை தன்னுடைய சிந்தனைகளாலும், வாழ்க்கையாலும் வெளிப்படுத்தி இந்திய தேசத்தின் விடிவெள்ளியாக பரிணமித்தவர். வேத, உபநிடதங்கள் ஆளுமை குறித்து வெளிப்படுத்திய உயர்ந்த எண்ணக்கருக்களும், கருத்தமைவுகளும் அவரது ஆளுமை குறித்த கருத்துக்களில் பெரிதும் செல்வாக்குச் செலுத்தின. எனினும் பழமை என்னும் வேரை நிலத்தில் ஆழமாகவும், வலுவாகவும் ஊன்றிக் கொண்டு மேலெழுந்த புதுமை என்னும் கிளைகளைப் பரப்பி ஆளுமை விருத்தி பற்றிய தத்துவ மரத்தை தளிர்க்க வைத்தார், சுவாமி விவேகானந்தர். ஆளுமை குறித்து விளக்கமுற்பட்ட மேலைத்தேய சிந்தனையாளர்கள் ஆளுமை குறித்து பல்வேறுபட்ட கருத்தாக்கங்களை வெளிப்படுத்தி நின்றனர். சிக்மண்ட் புறொய்ட் பாலியல் உந்தல்களையும், காள் யுங் தொன்மங்களையும், எரிக் எரிக்சன் சமூகத்தினையும் ஒருவரது ஆளுமையினைத் தீர்மானிக்கின்ற ஊக்கிகளாகக் குறிப்பிடுகின்றனர். சுவாமி விவேகானந்தர் இவை யாவற்றிலும் இருந்து வேறுபட்டு இந்திய மரபிற்கே உரிய தனித்துவமான பாணியில் ஒருவரது ஆளுமையினைத் தீர்மானிப்பது ஆன்மீக பலமே என்பதனை வலியுறுத்தினார். ஒருவரது ஆளுமையைத் தீர்மானிப்பதில் உடல் பலம், உயிர் பலம், மனபலம், அறிவு பலம், ஆன்மீக பலம் எனும் ஐந்து கூறுகள் செல்வாக்குச் செலுத்துவதாகக் குறிப்பிடும் விவேகானந்தர் ஆன்மீக பலமே அனைத்தையும் தீர்மானிப்பதாகக் குறிப்பிடுகின்றார். ஒருவரது உள்ளத்திலே புதைந்து கிடக்கின்ற ஆன்மபலமே ஒருவனை உயர்வடையச் செய்கின்றது. அத்தகைய ஆன்ம பலத்தை இந்திய மக்களுக்கு எடுத்தருளினார். ஒவ்வொருவரும் தமது தெய்வீக ஆற்றலையும், இயல்பையும் ஓங்கச் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் ஒருவனது சிந்தனைகளும், செயல்களுமே அவனது நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் தீர்மானிக்கின்றன என்பதனை எடுத்துக் காட்டினார். எனவே சிந்தனைகளும், செயல்களும் சரியானதாகவும், தெளிவானதாகவும், வலுவானதாகவும் அமைகின்ற போது ஒரு மனிதன் சிறந்த ஆளுமைமிக்க மனிதனாக உருவாகின்றான் என்பதனை எடுத்துக் காட்டியதோடு, சிறந்த ஆளுமை மிக்க தனிநபர்களின் உருவாக்கம், சிறந்த ஆளுமை மிக்க சமூகத்தினதும், நாட்டினதும் உருவாக்கத்திற்கு வழிவகுக்கும் என்பதனையும் தெளிவாக எடுத்துக்காட்டினார். இத்தகைய கால வரம்பிற்குட்படாத தீர்க்கதரிசனத்தைக் கொண்ட விவேகானந்தரது ஆளுமை குறித்த சிந்தனைகள் சமகால உலகிலும் மிகவும் தேவைப்பாடுடையனவாய் விளங்குகின்றன. இன்றைய உலகில் ஆளுமை என்பது குறித்து காணப்படுகின்ற தவறான புரிந்து கொள்ளல்களில் இருந்து விடுபட்டு, உண்மையான சிறந்த ஆளுமை குறித்த விழிப்புணர்வினைப் பெற்றுக் கொள்வதற்கு சுவாமி விவேகானந்தரது சிந்தனைகள் வித்திடுகின்றன என்பதனை இவ்வாய்வு வெளிப்படுத்தி நிற்கின்றது. இவ் ஆய்வுக்குரிய தரவுகள் இரண்டாம் நிலைத்தரவுகளில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டதோடு, இவ் ஆய்வானது பகுப்பாய்வு முறையியல், ஒப்பீட்டு முறையியல், விமர்சன முறையியல் என்பவற்றின் துணைகொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. |
URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4457 |
Appears in Collections: | Philosophy |
Files in This Item:
File | Description | Size | Format | |
---|---|---|---|---|
விவேகானந்தரின் ஆளுமை பற்றிய சிந்தனைகள் ஒரு மெய்யியல் ஆய்வு.pdf | 2.38 MB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.