Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4771
Title: யாழ்ப்பாணக் குடாநாட்டில் போர்த்துக்கேயர்கால பண்பாட்டுச் செல்வாக்கு: ஒரு வரலாற்று பார்வை
Authors: Arunthavarajah, K.
Keywords: பண்பாட்டு எச்சங்கள்;கலையழிவுக்கொள்கை;மதப்பரப்புரைகள்;பலாத்காரம்
Issue Date: 2012
Publisher: 2nd International Symposiun- 2012
Abstract: பொதுவாகப் பண்பாடெனப்படுவது ஒரு குறிக்கப்பட்ட மக்கள் கூட்டமானது தனது சமூக வரலாற்று வளர்ச்சியினடியாகத் தோற்றுவித்துக்கொண்ட பௌதீகப்பொருட்கள், ஆத்மார்த்தக் கருத்துக்கள், மத நடமுறைகள், சமூகப் பெறுமானங்கள் ஆகியவற்றினது தொகுதியாகவும் ஒரு கூட்டத்தினரின் தொழில்நுட்ப வளர்ச்சி, உற்பத்தி முறைமை, உற்பத்தி உறவுகள், கல்வி, விஞ்ஞானம், இலக்கியம், கலைகள், நம்பிக்கைகள் ஆகியவற்றின் தொகுதியாகவும் விளங்குகின்றன. இச்சொற்பிரயோகத்தினை பலப்படுத்தும் வகையில் போர்த்துக்கேயர் கால பண்பாட்டுச் செல்வாக்கானது யாழ்ப்பாணக்குடாநாட்டின் ஒரு காத்திரமான இடத்தினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் தனித்துவமான வரலாற்றினைக் கொண்ட பிராந்தியங்களில் யாழ்ப்பாணக்குடாநாடு ஒன்றாகும். இப்பிரதேசம் இந்தியாவின் தென்பகுதியுடன் குறிப்பாக தமிழகத்துக்கு அண்மையில் அமைந்திருந்தமையின் காரணமாக வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடக்கம் அதிகளவுக்கு தமிழகத்தின் பல்வேறு வகையான செல்வாக்குக்கு உட்பட்ட பிராந்தியமாக இருந்துவந்துள்ளதனை கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் அறிந்துகொள்ள முடிகின்றது. இவை ஆக்கிரமிப்புக்கள், உதவிகோருதல், திருமணபந்தங்கள், வணிகம் போன்றவற்றின் அடிப்படையில் அமைந்திருந்தன. 16ம் நூற்றாண்டின் பின்பாக போர்த்துக்கேயர்கள், ஒல்லாந்தர்கள், ஆங்கிலேயர்கள் போன்ற ஐரோப்பிய இனத்தவர்களின் ஆதிக்கத்தின் கீழ் தொடர்ச்சியாக இலங்கை மட்டுமன்றி யாழ்ப்பாணக்குடாநாடு முழுவதும் அடிமைப்பட்டுக் கிடந்ததன் பின்னணியில் இப்பகுதிகள் ஐரோப்பியர்களது பண்பாட்டுச்செல்வாக்கிற்கு உட்பட்ட பிராந்தியமாக மாறிக்கொண்டன. போர்த்துக்கேயர்கள் இலங்கை வருவதற்கு முன்பாகவே இந்நாட்டினைப் பற்றியும் யாழ்ப்பாணத்தினைப்பற்றியும் அறிந்திருந்தபோதும் இவர்களது இலங்கை வருகையானது தற்செயலான நிகழ்வாக அமைந்த அதே நேரத்தில் இவர்களது யாழ்ப்பாணம் நோக்கிய ஆதிக்க நகர்வானது இலங்கை வருகை போன்று அமையாது திட்டமிட்ட அடிப்படையில் அமைந்திருந்தமையும் நோக்கத்தக்கது. போர்த்துக்கேயர்கள் இலங்கை வந்த சமயத்தில் கோட்டை, கண்டி, யாழ்ப்பாணம் எனப் பிளவுபட்ட நிலையில் நாடு காணப்பட்டதுடன் இப்பிரிவுகளுக்கிடையிலே அரசியல் முரண்பாடுகளும் இருந்துவந்தன. இத்தகைய முரண்பாடுகளை தங்களது ஆதிக்க விஸ்தரிப்புக்கு சாதகமான வகையில் பயன்படுத்திக்கொண்ட போர்த்துக்கேயர்கள் படிப்படியாக இலங்கையின் ஒவ்வொரு பகுதிகளையும் கைப்பற்றி வந்த போதும் ஏறத்தாழ 100 வருடங்களையும் தாண்டிய நிலையில்தான் அவர்களது கவனம் யாழ்ப்பாணத்தின்மீது சென்றதெனலாம். இவ்வாறு யாழ்ப்பாணத்தினை முற்றுமுழுதாக தங்களின் வசம் கொண்டு வந்த போர்த்துக்கேயர்கள் அங்கே வணிகத்துடன் மதப்பரப்புரைக்கான செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்தனர்.அவற்றில் ஓரளவுக்கு வெற்றியும் கண்டனர்.இதற்கு யாழ்ப்பாண அரசின் பலவீனமும் யாழ்ப்பாணத்துச் சமூகத்தின் நடவடிக்கைகளும் அதற்கான சந்தர்ப்பத்தினைஅவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்ததென்பதனை மறுப்பதற்கில்லை.இந்து மதத்திலும் இந்துப்பண்பாட்டிலும் ஊறிப்போயிருந்த யாழ்ப்பாண மக்களுக்கு கல்வியினையும் சலுகைகளையும் வழங்கியதோடு மட்டுமன்றிச் சில சந்தர்ப்பங்களில் பலாத்காரத்தினைப் பிரயோகிப்பதன் வாயிலாகவும் தங்களது அரசியல் நடவடிக்கையுடன் கூடவே பண்பாட்டுச் செல்வாக்கினையும் போர்த்துக்கேயர்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஏற்படுத்தினர். இத்தகைய பண்பாட்டுச் செல்வாக்கானது மதம்இ மொழிஇ இலக்கியம்இ கலைஇ வாழ்க்கைமுறை போன்ற வடிவங்களில் ஏற்படுத்தப்பட்டன. இவற்றில் பல அம்சங்கள் பின்னர் வந்த ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்ட நிலையில் காணப்பட அவற்றில் சில அம்சங்கள் இன்றுவரை யாழ்ப்பாணக் குடாநாட்டில் போர்த்துக்கேயர்களது ஆட்சியின் முக்கியத்துவத்தினையும் சிறப்பினையும் எடுத்துக்கூறுகின்ற வகையில் தலை நிமிர்ந்து நிற்கின்றன. யாழ்ப்பாணக் குடாநாட்டில் குறிக்கப்பட்டதொரு காலப்பகுதியில் செல்வாக்குச் செலுத்திய போர்த்துக்கேயர்கள் அப்பகுதிகளில் பல வகையான பண்பாட்டு விழுமியங்களை விட்டுச்சென்றுள்ளனர்.ஏற்கனவே குறிப்பிட்டதன் பிரகாரம் பின்வந்த ஐரோப்பியர்களின் ஆட்சியில் இவற்றில் பல மாற்றியமைக்கப்பட்டன. சுதந்திரத்தின் பின்பாக காலத்துக்குகாலம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் போர்த்துக்கேயர்கள் காலப்பகுதி தொடர்பான பல்வேறு வகையான தகவல்கள் கிடைக்கப்பட்டு வந்தாலும் அவை ஒருங்கிணைக்கப்பட்டு அக்காலப் பண்பாடடுச் செல்வாக்கு தொடர்பான விடயங்கள் ஆழமாக ஆராயப்படவில்லை. இத்தகைய நிலையினை ஓரளவு éர்த்தி செய்வதனை இக்கட்டுரையானது தனது நோக்கங்களில் ஒன்றாக கொண்டுள்ளது. போர்த்துக்கேயர் ஆட்சியிலும் பின்வந்த காலங்களிலும் ஓரளவுக்காவது பாதுகாக்கப்பட்ட இத்தகைய பண்பாட்டு அம்சங்கள் தொடர்ந்து வந்த காலங்களில் சரியாகப் பேணப்படாது அவை சிதைவடைந்த நிலையில் இன்று காணப்படுகின்றன. அந்த வகையில் போர்த்துக்கேயர்கள் கால பண்பாட்டுச் சின்னங்கள் தொடர்பாகவும் அவற்றின் முக்கியத்துவம் தொடர்பாகவும் இக் கட்டுரை ஆராய்கின்றது. மேலும் இன்று வரை இப் பண்பாட்டு அம்சங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தி வந்துள்ளது என்பதனை ஆராய்வதனை மேலும் தனது இலக்குகளில் ஒன்றாக இக்கட்டுரை கொண்டுள்ளது. போர்த்துக்கேயர்களது ஆட்சியில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் எற்பட்ட புதிய பண்பாட்டம்சங்களை கண்டறிவதும் அவை எந்தளவுக்கு பாரம்பரிய யாழ்ப்பாணப்பண்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தின, அவை தற்காலத்திலும் தொடர்கின்றனவா என்பதனை கண்டறிவதும் அவற்றினை ஆவணப்படுத்துவதும் சமுதாயத்தின் கட்டாய தேவையாகும். யாழ்ப்பாணக் குடாநாட்டில் போர்த்துக்கேயர்களது ஆட்சிக் காலப்பகுதியில் ஏற்பட்ட பண்பாட்டு செல்வாக்கினை எடுத்துக்காட்டுதல், இன்றும் காணப்படுகின்ற பண்பாட்டுக் கூறுகளை வெளிக்கொணரல், கத்தோலிக்க மதம்;, கல்வி, மொழி, இலக்கியம், கலை, சமூகப் பழக்கவழக்கங்கள் போன்றவற்றினை ஆராய்வது ஆய்வுக்கட்டுரைக்கான கருதுகோளாகவும் அமைகின்றது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4771
Appears in Collections:History



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.