Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4873
Title: சிவாகம விதிமுறைகளும் திருக்கோயில் நிர்வாகமும்
Authors: Shanthini, A.
Keywords: கோயில்;நிர்வாகம்;சிவாகமம்;இந்துசமூகம்;பூசை
Issue Date: 2016
Publisher: University of Jaffna
Abstract: திருக்கோயில்கள் ஊடான வழிபாட்டுமுறைகள் நீண்டகாலமாக இந்துக்களின் வாழ்வியலோடு நெருக்கமாகப் பின்னிப்பிணைந்து வந்துள்ளன. கோயில்கள் வெறுமனே ஒரு வழிபாட்டுமையம் என்பதற்கு மேலாகப் பல்வேறுநிலைகளிலும் இந்துக்களின் வாழ்வை வழிப்படுத்தியிருந்ததை எமது சமயவரலாற்றின் மூலமாக அவதானிக்க முடிகிறது. திருக்கோயில்களின் அமைப்புமுறைகள், அவற்றுள் பிரதிஷ்டை செய்யப்படும் விக்கிரங்கள், அவற்றை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் பூசைகள் போன்றவற்றின் விதிமுறைகளைக் கூறும் இலக்கியங்களாக சிவாகமங்கள் சிறப்புப்பெறுகின்றன. இவையுணர்த்தும் தத்துவவிளக்கங்களும் குறிப்பிடத்தக்கனவாகும். திருக்கோயில் நிர்வாகம் பற்றி நேரடியான குறிப்புக்கள் இல்லாவிட்டாலும் சிவாகமங்கள் முன்வைக்கும் விதிமுறைகள் கிரமமாகப் பின்பற்றப்படுமாயின் அது செம்மையான திருக்கோயில் வழிபாட்டுக்கு ஆதாரமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக பூசைமுறைமையையும் மனிதவளத்தையும் எவ்வாறு நிர்வாகம் செய்யலாம் என ஆய்வுசெய்வது இந்துசமூகத்திற்குப் பயனுள்ளதாக அமையும். இன்றைய காலத்தில் உலகமயமாக்கம், பின்நவீனத்துவம் எனபன பற்றிய கருத்தாடல்களும் அபரிமிதமான தொழில்நுட்பவளர்ச்சியும் உலகத்தொடர்பாடல் சூழலைச் சுருக்கியுள்ள நிலையில் சமயரீதியான பெறுமதிகள் பலசெல்வாக்கிழந்து வருகின்றன. குறிப்பாக இக்காலகட்டத்தில் இந்துக்கள் திருக்கோயிலுடனான உறவுகளை நெகிழவிடுகின்றனர். கோயில்நிர்வாகத்திலும் முரண்பாடானநிலையைக் காணமுடிகிறது. மரபுரீதியாகப் பின்பற்றப்பட்டுவரும் சிவாகமவிதிமுறையின் பின்னணியினூடாக திருக்கோயில் நிர்வாகத்தை ஒழுங்கமைப்பது பற்றியதாக இவ்வாய்வு அமைகிறது. திருக்கோயிகளில் சிவாகமவிதிகளை கிரமமான முறையில் கடைப்பிடிப்பதனூடாக செம்மையான நிர்வாகத்தை ஏற்படுத்துதலும், சிவாகமங்களின் முக்கியத்துவத்தை விளங்கிக்கொள்ளுதலும் இவ்வாய்வில் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. திருக்கோயில்கள் புனிதமாகப் பேணப்படவேண்டியன. இதனைக் கோயிலுக்குள் பணிபுரிவோரும், வழிபடுவோரும் உணர்ந்துகொள்ளுதல் அவசியமானதாகும். அத்துடன் இன்றையகாலத்தில் இளவயதினர் உட்படப் பலரும் கோயில்வழிபாட்டின் முக்கியத்துவத்தினை அறிவதன் மூலம் சமய சமூகவிழுமியங்களை பின்பற்ற நேரிடுகின்றது. செம்மையான நிர்வாகத்தின் வாயிலாக மக்களுக்கும் கோயிலுக்கும் இடையேயான உறவை வளர்தெடுத்தல், அடுத்த இந்துஇளம்சமூகத்திற்கு எமது திருக்கோயிற்பாரம்பரியத்தின் சிறப்பினை விளங்கவைத்தல் போன்றவை இவ்வாய்வின் நோக்கங்களாகும். மேற்படி ஆய்வினை மேற்கொள்வதற்குச் சிவாகமங்கள் குறிப்பாக பூசை மற்றம் கிரியைமுறைகள் பற்றிக்கூறும் சிவாகமங்கள் முதன்மையான மூலாதாரங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் திருக்கோயில்களின் முகாமைத்துவம் பற்றிய நூல்கள், கட்டுரைகள் வெளிவராதநிலையில் களஆய்வு, நேரடிஅவதானம், நேர்காணல் போன்றனவும் முதலாம்தரச் சான்றுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இவ்வாய்வில் விபரணஆய்வு, ஓப்பீட்டாய்வு முதலிய ஆய்வு அணுகுமுறைகள் பின்பற்றப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இந்துசமயத்தவர்களை தமது சமயத்தில் நம்பிக்கைவைத்து அதனது பாரம்பரியத்தை நிலைநிறுத்துவதற்குத் தூண்டுதல் அளிக்கமுடியும். அத்துடன் செம்மையான நிர்வாகமானது வழிபடுவோருக்கும் ஆலயத்திக்கும் இடையிலான ஒருவகையான பிணைப்பை ஏற்படுத்தத் துணையாகும். மேலும் இளம்சமுதாயத்தினர் சிவாகமங்கள் கூறும் விடயங்கள், திருக்கோயில்களின் முக்கியத்துவம் என்பன பற்றிய சில செய்திகளையாவது அறிந்துகொள்ளுதல் போன்ற சில விடயங்களை வெளிப்படுத்த இவ்வாய்வு முனைகிறது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4873
ISSN: 2478-0634
Appears in Collections:History



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.