Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5273
Title: | மிண்டிய மாயாவாதம் என்னும் சண்டமாருதம்...' என்ற மணிவாசகரின் திருவாசக அடியினை முன்னிறுத்திய உரையாடல் |
Authors: | Muhunthan, S. |
Keywords: | மாயாவாதம்;மணிவாசகர்;சூனியவாதம்;பௌத்தம் உலகாயுதம் |
Issue Date: | 2020 |
Publisher: | University of Jaffna |
Abstract: | திருவாசகமானது சிவபுராணம் முதற்கொண்டு அச்சோப்பதிகம் ஈறாக ஐம்பத்தொரு பாடற்பகுதிகளில் இருநூற்று ஐம்பத்தாறு பாடல்களைக் கொண்டது. மணிவாசகர் பெற்ற சிவானுபூதியின் வெளிப்பாடாக அமைந்த ஞானப்பனுவலாக இது கருதப்படுகிறது. சமயமெய்யியல் அனுபவத்துக்கு அப்பால் மணிவாசகர் என்ற தனியனின் வாழ்க்கைச் சுவடுகளை ஆய்வுசெய்ய முனைவோருக்குரிய அச்சான்றுகளும் திருவாசகத்தில் விரவியுள்ளன. எவ்வாறாயினும் இவ்வகச்சான்றுகள் மூலமும் மணிவாசகரின் வாழ்க்கைச்சுவடுகளில் இழையோடியுள்ள சர்ச்சைகளைத் தீர்க்கமுடியவில்லை. ஏனெனில் தேவார முதலிகளைப் போலன்றி மணிவாசகரின் வாழ்வும் காலமும் ஆய்வாளர்களுக்கு அவிழ்க்க முடியாத புதிர்களைத் தொடர்ந்தும் வழங்கியவண்ணம் உள்ளது. மறைமலையடிகள், பேராசிரியர் கா.சுப்பிரமணியபிள்ளை, க.வெள்ளைவாரணனார், பேராசிரியர் டி.டி.சித்திலிங்கையா, பேராசிரியர் அ.சிவலிங்கனார், பேராசிரியர் நா.சுப்பிரமணிஐயர், முனைவர் சோ.ந..கந்தசாமி, மு.பு.சேஷையர், திருமலைக்கொழுந்துப்பிள்ளை ஆகியோர் மணிவாசகரின் வாழ்க்கைச்சுவடுகள் தொடர்பிலான காத்திரமான ஆய்வுகளில் ஈடுபட்டோராக அறியப்படுகின்றனர். இவர்களுடைய ஆய்வுகளில் செல்நெறியானது பெரும்பாலும் இரண்டு தளங்களில் பயணித்துள்ளது. மணிவாசகரின் காலம்: தேவார முதலிகட்கு முற்பட்டது தேவார முதலிகட்கு பிற்பட்டது எனினும் குறித்த இந்த ஆய்வுக்கட்டுரையானது மணிவாசகரின் காலம் குறித்த சர்ச்சைகளில் கவனம் செலுத்தவில்லை. 'மிண்டிய மாயாவாதம் எனும் சண்டமாருதம் சுழித்து அடித்தார்ப்ப.......' என்று தொடரும் திருவாசகத்தின் போற்றித்திருஅகவல் அடிகள் குறித்தே அது கவனம் கொள்கிறது. இங்கே 'மாயாவாதம்' என்ற சொல்லாடலால் மணிவாசகர் சுட்டவிழைவது ஆதிசங்கரின் அத்வைதத்தையே என்பது பலருடைய ஏகோபித்த முடிவாகும். முற்கூறிய ஆய்வாளர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. எவ்வாறாயினும் 'அத்வைதம்' சைவபக்தி இயக்கம், பௌத்தம் ஆகிய மூன்று தளங்களில் தென்னிந்திய வரலாற்றுச் செல்நெறியைச் சீர்தூக்கி நோக்கும் போது 'மாயாவாதம்' என்ற சொல்லால் அத்வைதமே சுட்டப்பட்டது என முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ள இயலாது. பௌத்த மெய்யியற் பிரிவுகளின் விகசித்த மேலாண்மையை விமர்சிக்கும் விதமாக மணிவாசகர் இச்சொற்றொடரைக் கையாண்டிருக்க இடமுண்டு. இதற்கான சாத்தியப்பாடுகளை அடையாளப்படுத்தும் வகையிலேயே இக்கட்டுரை பயணிக்கிறது. |
URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5273 |
ISBN: | 978-955-44441-3-3 |
Appears in Collections: | Hindu Civilization |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.