Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5359
Title: | கடப்புநிலை உளவியலின் தற்காலப் போக்கு: வடமாகாணத்தை அடிப்படையாக கொண்ட கலப்புமுறை ஆய்வு |
Authors: | Arun, A. Rajkumar, A. |
Keywords: | உளவியல்;கடப்புநிலை;அமானுஸ்யங்கள்;புலன்கடந்த புலக்காட்சி |
Issue Date: | 2018 |
Publisher: | University of Jaffna |
Abstract: | மனித நடத்தைகளை விஞ்ஞானரீதியாக ஆராய்கின்ற கற்கையான உளவியலின் பிரிவுகளில் ஒன்றாக கடப்புநிலை உளவியலானது காணப்படுகின்றது. கடப்புநிலை உளவியல் மனிதனுடைய மனதின் அளப்பரிய சக்திகள், மனிதனுக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள், ஆவி, ஆன்மா குறித்த விடயங்கள் போன்றவற்றை விஞ்ஞானரீதியாக ஆராய்கின்றது. “கடப்புநிலை உளவியலானது உயிர்களுக்கு இடையேயான தொடர்பு மற்றும் இயற்கையின் அறியப்பட்ட இயற்பியல் சட்டங்களை மிஞ்சுகின்றதுபோல் தோன்றும் அவற்றினுடைய வெளிப்புறச் சூழல் ஆகியவற்றிற்கிடையேயான பரஸ்பர தொடர்பு பற்றிய விஞ்ஞானரீதியான கற்கை ஆகும்” (Parapsychology is the scientific study of interactions between living organisms and their external environment that seem to transcend the known physical laws of nature) என வரையறை செய்யப்படுகின்றது. இத்தகைய கடப்புநிலை உளவியலில் பல்வேறு விடயங்கள் மிக நீண்டகாலமாக உலகெங்கும் ஆராயப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஞானதிருஸ்டி(Clairvoyance), தொலை நுண்ணுணர்வு (Telepathy), தொலைவில் கேட்டல் (Clair-audience), முன்னுணர்தல் (Precognition) மறுபிறப்பு, போன்ற பல்வேறு விடயங்கள் கடப்புநிலை உளவியலில் ஆராயப்படுகின்றன. அவ்வகையில் இவ்வாய்வானது கடப்புநிலை உளவியலின் அம்சங்கள் இலங்கையின் வடமாகாணத்தில் எத்தகைய வளர்ச்சிப் போக்கினையும், உண்மைத் தன்மையையும் கொண்டுள்ளன என்பதை கண்டறியும் நோக்கோடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வில் புலன்கடந்த புலக்காட்சி (ESP) மையப்படுத்தப்படுவதுடன் இவ்வாய்வானது பிரதான முறையியலாக பரிசோதனை முறையினையும் ஏனைய ஆய்வு முறைகளான அவதான முறை மற்றும் நேர்காணல் முறை என்பவற்றையும் தரவு சேகரிப்பதற்கென கொண்டுள்ளது. மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 200 மாதிரிகள் எழுமாற்று அடிப்படையில் மாதிரிகளாக தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றனர். பண்பியல் மற்றும் அளவியல் முறைகளின் கலப்பு முறை ஆய்வாக இவ்வாய்வு அமைந்திருப்பதுடன் அளவியல்சார் அம்சங்களை பகுப்பாய்வு செய்வதற்கென SPSS தரவுப் பகுப்பாய்வு செயலியானது பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. பரிசோதனைமுறை, அவதானமுறை, கட்டமைக்கப்பட்ட நேர்காணல் என்பவற்றின் ஊடாக பெறப்பட்ட தரவுகள் பண்பியல் மற்றும் அளவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வு முடிவானது பெறப்பட்டது. இதன்படி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகளின்படி 6 வீதம் தொலை நுண்ணுணர்விற்கான (Telepathy) சாதகமான நிலைகளும் 3.4 வீதம் தொலைவில் பார்த்தல், ஞானதிருஸ்டி, முக்காலம் உணர்தல் போன்றவற்றிற்கான சாதகமான முடிவுகளும் கண்டறியப்பட்டன. நேர்காணல் ஊடாக பெறப்பட்ட தரவுகளின்படி 94 வீதமானவர்கள் அமானுஸ்யங்களை நம்புவதும், 36 வீதமானவர்கள் அமானுஸ்யங்களுடன் தொடர்புடைய அனுபவங்களை கொண்டிருப்பதும் கண்டறியப்பட்டது. மேலும் தொலைவில் கேட்டல், முக்காலத்தையும் உணர்தல், உளத்தால் இயக்கல், நோய்களை குணமாக்கும் ஆற்றல், மனக்கண் தொலைக்காட்சி, வசிய சக்தி, பொருட்களை தொடுவதன்மூலம் அவற்றின் வரலாற்றை அறிதல், செய்வினை செய்யும் ஆற்றல் கொண்டோர், ஆகிய கடப்புநிலை உளவியலின் அம்சங்கள் வடமாகாணத்தில் 00 வீதமாக காணப்பட்டமையும் நேர்காணலின் தரவுகள் ஊடாக கண்டறியப்பட்டன. அமானுஸ்யங்கள் தொடர்பாக வடமாகாணத்தில் குறித்த காலத்தினுள் சேகரிக்கப்பட்ட நிகழ்வுகள் தொடர்பான தகவல்கள், வாக்குமூலங்கள் மற்றும் அவதானங்கள் என்பவை விஞ்ஞானரீதியாக நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்களைக் கொண்டிருக்கவில்லை என்பதும் ஆய்வு முடிவுகளாகப் பெறப்பட்டன. |
URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5359 |
Appears in Collections: | Philosophy |
Files in This Item:
File | Description | Size | Format | |
---|---|---|---|---|
கடப்புநிலை உளவியலின் தற்காலப் போக்கு வடமாகாணத்தை அடிப்படையாக.pdf | 1.47 MB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.