Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/9062
Title: இலங்கையின் சோழர்காலக் கல்வெட்டுகளில் சிவன்
Authors: Sajitharan, S.
Keywords: சோழர்;கல்வெட்டு;ஈஸ்வரங்கள்;சிவன்;தானம்;கோயில் நிர்வாகம்
Issue Date: 2017
Publisher: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
Abstract: தமிழக வரலாற்றிலே கி.பி 850 - 1230 ஆகிய காலகட்டங்களை உள்ளடக்கிய சோழப் பேரரசுகாலம் பல துறைகளிலும் வளர்ச்சி பெற்ற ஒரு பொற்காலமாகும். முதலாம் இராஜராஜன் தொடக்கம் முதலாம் குலோத்துங்கன் காலம் வரை (993 - 1070) இலங்கையில் சோழர் செல்வாக்கு நேரடியாக ஏற்பட்டிருந்தது. சோழப் பேரரசின் ஓர் மண்டலமாக இலங்கையை இணைத்த சோழர் பொலனறுவையைத் (ஜனநாத மங்கலம்) தலைநகரமாகக் கொண்டு பல்வேறு வளநாடுகளாகவும், நாடுகளாகவும், சதுர்வேதி மங்களங்களாகவும் பிரித்து நிர்வாகத்தினை மேற்கொண்டிருந்ததுடன், அவர்கள் கால பொருளாதார, சமய, சமூக பண்பாட்டு அம்சங்கள் யாவும் தங்கு தடையின்றி இலங்கையிலும் பிரதிபலித்திருந்தது. சோழரின் இலங்கை மீதான நடவடிக்கைகளை இன்றுவரை பிரதிபலிக்கும் வகையில் கல்வெட்டுக்கள், நாணயங்கள், இலக்கியங்கள், கட்டிட, சிற்பக்கலை அம்சங்கள் அமைந்துள்ளன. அவற்றுள் சோழருடைய கல்வெட்டுக்கள் மிகமுக்கியமான தொல்லியல் எச்சங்களாகும். சோழர்கள் பிற சமயத்தை ஆதரித்த போதிலும் சைவ சமயத்திற்திற்கு பெரு ஆதரவு வழங்கியிருந்தனர். சோழ மன்னர்களில் பெருன்பான்மையானவர்கள் சிவ பக்தர்களாக விளங்கியிருந்தனர். சோழர்கள் பிரமாண்டமான கலைக்கூடங்களாக கோயில்களை அமைத்திருந்ததுடன் பெரும்பாலும் அச் செய்தியினையும் கோயிலுக்கு அளிக்கப்பட்ட தானங்கள் பற்றிய விபரங்களையும் கோயில் சுவர்களிலும், தூ ண்களிலும் கல்வெட்டுக்களாக செதுக்குவது அவர்களது வழமையாகும். சோழராட்சி 77 ஆண்டுகள் இலங்கையில் நிலைபெற்றிருந்த காலப்பகுதியில் பல்வேறு சாசனங்கள் எழுதப்பட்டிருந்ததுடன் அவற்றில் பெரும்பாலானவை சமய சார்பானவையாகவே அமைந்திருந்தன. இச் சாசனங்கள் மாந்தை, பதவியா, கந்தளாய், நிலாவெளி, மானாங்கேணி, திருகோணமலை, யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை, அத்தரகல, கடவத், மெறிகிரியா ஆகிய இடங்களிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளன. இலங்கையில் கிடைத்த சோழக்கல்வெட்டுக்கள் இங்கு நாயன்மார்களால் பாடல் பெற்ற சிவாலயங்களான திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் போன்றன புனரமைக்கப்பட்டதனையும், புதிதாக பல சிவன் கோயில்கள் அமைக்கப்பட்டதனையும், இவ் சிவன் ஆலயங்களில் அன்றாட பூஜை வழிபாடுகள், கிரியைகள், திருவிழாக்கள் போன்றன சிறப்பாக இடம் பெறுவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் பற்றியதாகவும், சிவன் கோயிலுக்கு வழங்கப்பட்ட பலவகை தானங்கள் பற்றியதாகவும், தானங்கள் வழங்கப்பட்டதன் நோக்கங்கள் பற்றியதாகவும் அமைகின்றது. இவ் சோழக் கல்வெட்டுக்களை சான்றாதாரமாக கொண்டு நோக்கும் போது சோழர் கால இலங்கையில் ஈஸ்வரங்களான சிவன் கோயில்கள் சிறப்புற்ற தன்மையினையும், சிவன் கோயில் நடவடிக்கைகள் பற்றியும், இக்கோயில் நடவடிக்கைகளில் பங்கு கொண்ட சமூகத்தின் பல பிரிவுகள் பற்றியும் அறிய முடிகின்றது. எனினும் சோழக் கல்வெட்டுக்களில் பெரும்பான்மையானவை சிதைவடைந்த நிலையிலேயே கிடைக்கப்பெற்றமையானது கல்வெட்டு செய்திகளை முழுமையாக அறிய முடியாதுள்ளது. காலத்துக்கு காலம் இடம்பெற்ற ஆட்சிமாற்றங்கள் மற்றும் அந்நியரது கலையழிவுக்கொள்கைகள் போன்ற காரணங்களால் சோழக்கல்வெட்டுக்களில் பெருன்பான்மையானவை அழிந்தும், அழியாத நிலையிலுமே கிடைக்கப்பெற்றுள்ளன. எஞ்சிய கல்வெட்டு எச்சங்களை கொண்டே சோழர் கால இலங்கையில் சிவ வழிபாடு சிறப்புற்றிருந்ததனை அறிய முடிகின்றது. இக் கல்வெட்டுச் செய்தியினை உறுதிப்படுத்தும் விதமாக இன்று வரை எஞ்சியிருக்கும் தொல்லியல் எச்சங்களான பூநகரி மண்ணித்தலை சிவனாலயம், நெடுந்தீவு சிவன் ஆலய எச்சங்கள், பொலனறுவை சோழர்கால சிவனாலயங்கள் மற்றும் இலங்கையின் பல்வேறு இடங்களில் சோழர் காலத்துக்குரியதாக அடையாளப்படுத்தப்பட்ட சிவலிங்கங்கள், நடராஜர், அர்த்தநாரீஸ்வரர், சிவன், பார்வதி விக்கிரக வடிவங்கள் என்பன அமைந்துள்ளன.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/9062
Appears in Collections:History



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.